திருச்சி சிவா மகன் சூர்யா கைது!
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் கைது செய்தனர். பஸ் உரிமையாளரை மிரட்டியதாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகை சூர்யாவின் கார் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் பஸ் மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி, அந்த பஸ்ஸின் டிரைவரை மிரட்டியுள்ளார் சூர்யா. அத்துடன் அந்த பஸ்ஸையும் அங்கிருந்து எடுத்துச் சென்று உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பஸ்ஸை கடத்தியதாக சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் அவரை இன்று மாலை கைது செய்தனர்.
தனது தந்தை திருச்சி சிவா மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக கடந்த வாரம் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து சூர்யாவின் கைது கண்டித்து பாஜகவினர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூர்யாவின் கைதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது அறிவாலயம் அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.
சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது
பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று ஸ்டாலின் மற்றும் மம்தா ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, சென்னையில் மதுஅருந்திவிட்டு அந்த பாட்டிலால் நண்பர்களை குத்தியதாக சூர்யா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது அடுத்ததாக மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டாபிக்ஸ்