Top 10 News: ’அதானி நிறுவன சர்ச்சை! விடுதலை ஆனார் கஸ்தூரி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Top 10 News: அதானி நிறுவன சர்ச்சை, ஜாமீனில் விடுதலை ஆனார் கஸ்தூரி, சனாதனம் குறித்து திருமாவளவன் பேட்டி, அரிட்டாபட்டி குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம், திமுக எம்.பிக்கள் கூட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
- அதானி குழுமத்துடன் தொடர்பா?
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மத்திய மின்சார அமைப்புகள் உடன் 1500 மெகாவாட் மின்சாரம் மட்டும் ஒப்பந்தம் செய்து உள்ளோம் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
2. சனாதனம் குறித்து திருமா பேட்டி
சனாதனம் என்பது வேறு; கடவுள் நம்பிக்கை என்பது வேறு. கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை என்பது சாதாரண மக்களின் நம்பிக்கை. நம்மோடு உள்ள தோழர்கள் கோயில்களுக்கு அழைத்ததால் கோயிலுக்கு செல்கிறோம் என பழனியில் சாமி தரிசனம் செய்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
3. சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்
சென்னையில் சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்கு செய்வதற்காக சிப் பொருத்திய அடையாள அட்டையை வழங்கும் திட்டத்தை நாளை முதல் சென்னை மாநகராட்சி செயல்படுத்துகிறது.
4. அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் விவகாரம்
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை வனப்பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். அரிட்டாப்பட்டியை உயர் பன்முகத் தன்மை பகுதியாக அறிவித்து உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக வனத்துறையிடம் அனுமதி கேட்கும் போது திட்டத்தை நிராகரிக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி கருத்து.
5. டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்க கோரிக்கை
பெருமான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படை காரணம் என்பதால் மது விற்பனைக்கு நேரக் கட்டுப்பாடு தேவை என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கோரிக்கை.
6. ஜாமீனில் வந்தார் கஸ்தூரி
சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு கொடுத்த தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி, என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆதரவாக இருந்த ஆந்திர, தெலுங்கானா மக்களுக்கும் நன்றி என சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நடிகை கஸ்தூரி பேட்டி.
7. நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்
வரும் நவம்பர் 25ஆம்தேதி அன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகின்றது.
8. மிக கனமழை எச்சரிக்கை
நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
9. அதானி விவகாரம் குறித்து கேள்வி
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து.
10. ஈபிஎஸ்க்கு திமுக கண்டனம்
எடப்பாடி பழனிசாமி அவர்கள், தான் யோக்கியரை போல, இந்த வழக்கில் மேல் முறையீடு செல்லக் கூடாது என்கிறார். சட்டம் ஓழுங்கு கெட்டு போச்சு என பேசுகிறார். அதிமுக ஆட்சியில் நடக்காத சம்பவங்களா? மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த வழக்கில் தீர்ப்பு கூட வந்தது. ஆக தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு.
டாபிக்ஸ்