Tamil Top 10 News: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வயநாட்டில் மீண்டும் தொடங்கிய தேடுதல் பணி - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா, வயநாட்டில் மீண்டும் தொடங்கிய மீட்புப்பணிகள் உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வானிலை ஆய்வு மைய தகவல்
தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராகுல் காந்தி கேள்வி
முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் மாதவி இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்? ஹிண்டன்பர்க் அறிக்கையை சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தமாக 126 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. 40 தங்கம் 27 வெள்ளி 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை பெற்று சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடம், 6 பதக்கங்களுடன் இந்தியா 71ம் இடம் பிடித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 48வது இடம் பிடித்த நிலையில், தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் 71ம் இடத்தில் உள்ளது.
பாஜக மூத்த தலைவர் குற்றச்சாட்டு
இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கில், காங்கிரஸுடன் சதி செய்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது என்று பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகின் வலுவான நிதிக் கட்டமைப்பையும் வேகமாக வளரும் பொருளாதாரத்தையும் கொண்ட நாடான இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. செபியின் மீது ஹிண்டன்பர்க் நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதலில் காங்கிரஸும் கூட்டு. ஒரு சிலஉண்மைகளைக் கூறி, பல பொய்களை அடுக்கும் காங்கிரஸ் பாணியிலேயே இந்த அறிக்கை உள்ளது.நான் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளேன். காங்கிரஸின் உதவியுடன் பல சர்வதேச அமைப்புகள்இந்தியாவின் வளர்ச்சியை குலைக்க முயன்று வருகின்றன. நாம் ஒரு போதும் இதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்
சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்!
திருத்தணி ராமஞ்சேரி அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாணவர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக -கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
நிபா வைரஸ் பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சோதனை சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களும், வாகனங்களும் முறையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 108 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2483 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 95 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறப்பு. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 40 கன அடியாக அதிகரிப்பு.
பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு உதவுவது குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயநாட்டில் மீண்டும் தொடங்கியது தேடுதல் பணி
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வயநாடு சென்றார். இதனால் அங்கு தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி டெல்லி சென்றபின் நேற்று 13-வது நாளாக தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்