Navalar: ’நடமாடும் பல்கலைக்கழகம்’ நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் இன்று…!
நாவலர் நெடுஞ்செழியனின் 103ஆவது பிறந்தநாள் இன்று…!
கல்வி சிறந்த தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உண்டு ஆனால் அண்ணாவால் மாலை நேரத்து பல்கலைக்கழகங்கள் என்று வர்ணிக்கப்பட்ட திமுக மேடைகளை பல்கலைக்கழகங்கள் என்று சொல்லும் அளவுக்கு மாற்றியதில் ’நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு தனிப்பங்குண்டு.
’தம்பி வா தலைமை ஏற்க வா’ என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனால் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கடைசி வரை கட்சிக்கோ ஆட்சிக்கோ தலைமை ஏற்க முடியாதது ஏன் என்பதை அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணாபுரத்தில் 11-7-1920ஆம் ஆண்டு ராசகோபாலன் - மீனாட்சி சுந்தரி இணையருக்கு மகனாக பிறந்த நாராயணசாமி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக படித்தபோது ஏற்பட்ட சுயமரியாதை உணர்வு அவரது பெயர் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. நாராயணசாமி என்ற தனது வைதீக பெயரை நெடுஞ்செழியன் என்ற தனித்தமிழ் பெயராக மாற்றி கொண்டார்.
சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய பகுத்தறிவு சிந்தனைகளால் திராவிடர் கழகத்தில் சேர்ந்த நெடுஞ்செழியன் தனது உணர்ச்சி மிக்க உரைகளால் அதனை சாமானிய மக்களுக்கு திராவிட இயக்க சிந்தனைகளை கொண்டு சென்று சேர்க்கும் இளம்பெரியாராக மாறினார். ‘திராவிட நாடு’ கேட்டு தமிழ்நாடு முழுக்க உரையாற்றினார்.
அக்காலத்தில் பெரியாரை போன்றே இவரும் தாடி வைத்திருந்ததால் ‘இளந்தாடி நெடுஞ்செழியன்’ என்று அழைக்கப்பட்டார். 1949 ஆம் ஆண்டு வடசென்னையில் உள்ள ராயப்பேட்டை ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது அந்த இயக்கம் நிறுவ அடித்தளமாய் இருந்த ஐம்பெரும் தலைவர்களில் நெடுஞ்செழியனும் ஒருவர்.
உயிருடன் இருந்தபோதே திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை தம்பி வா தலைமை ஏற்க வா! என்று சொல்ல நாவலர் நெடுஞ்செழியனுக்கு அண்ணா வழங்கினார்.
1962, 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நெடுஞ்செழியன் திமுக ஆட்சி அமைத்த 1967ஆம் ஆண்டு அண்ணாவின் அமைச்சரவையில் கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சிமொழி, கைத்தறி, அறநிலையம் உள்ளிட்ட துறைகளை கவனிக்கும் அமைச்சரானார்.
அண்ணா மறைவுக்கு பிறகு தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் இருந்த நிலையில் எம்ஜிஆர் உள்ளிட்டோரின் ஆதரவு இருந்ததால் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.
திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்கும் முடிவை எடுத்த தலைவர்களில் முக்கியமானவராக நாவலர் நெடுஞ்செழியன் நினைவுக்கூறப்படுகிறார். பின்னர் கலைஞர் கருணாநிதி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1977ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கி அந்த ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பின்னர் அதிமுகவுடன் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இணைத்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆன நெடுஞ்செழியன், எம்ஜிஆருக்கு அடுத்த நிலையில் இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1987ஆம் ஆண்டு அதிமுகவின் தலைவராக ஜெயலலிதா உருவெடுத்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக க.ராசாராம், செ.அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இணைந்து அதிமுக நால்வர் அணி எனும் பிரிவை உருவாக்கினார்.
1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்ததால் அரசியலில் இருந்து சிலகாலம் விலகி இருந்தார்.
பின்னர் ஒருங்கிணைந்த அதிமுக உருவாண போது அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளரானார். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி அமைத்தபோது தேனி தொகுதியில் வென்று நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.
அண்ணா மறைவுக்கு பின்னரும், எம்ஜிஆர் உடல்நலக்குறைவாக இருந்தபோது, பின்னர் அவர் மறைந்தபோதும் சில காலம் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் அதிக காலம் இடைக்கால முதலமைச்சராக இருந்த பெருமை நாவலர் நெடுஞ்செழியனையே சாரும்.
2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி தனது 79ஆவது அகவையில் உடலநலக்குறைவால் நாவலர் நெடுஞ்செழியன் காலமானார்.
டாபிக்ஸ்