இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு - தமிழ்நாடு அரசு
ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் அந்த சிறுமியின் தாயும் அவரது உறவினர்களும் பல மருத்துவமனைகளில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் கருமுட்டை தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதனையடுத்து ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில், சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன், இணை இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் அடங்கிய 6 போ் குழுவினா் விசாரணை நடத்தினா். அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்ததும், அந்த பழக்கத்தை வைத்தே தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
மேலும் சேலம், ஈரோடு, ஓசூர் மட்டுமின்றி கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
அனைத்து தனியார் மருத்துவமனை பதிவேடுகளையும், சரிபார்த்து வருவதாகவும், தவறு நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேறு மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் விசாரணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக, இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில், மருத்துவத்துறை கூடுல் செயலாளர் தலைவராகவும், குடும்பநலத்துறை இயக்குநர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் அமைப்பைச் சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தற்போதைய சட்டத்தால் 23 முதல் 25 வயது வரை வரையிலான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும் எனவும், அதுவும் 8 முறை மட்டுமே ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டைகளை சேகரிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்ததாக இந்த சட்டத்தை மீறினால் 3 முதல் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
டாபிக்ஸ்