TN Rains: வரலாறு காணாத பெருமழை..மீட்பு உதவிகள் கோர வாட்ஸ்அப் எண் அறிவிப்பு!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்அப் எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நான்கு மாவட்டங்களில் பல மணிநேரம் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவை தடைபட்டுள்ளது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது.
அதீத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாநகரின் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக நெல்லை – கூடங்குளம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த் வரலாறு காணாத மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் - 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள் கோரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.k