Pongal Gift2023:பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!
Tn CM Stalin Start Pongal 2023 Gift: பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் 487.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,19,33,342 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், ஆகியவற்றை 2,19,33,342 குடும்பங்களுக்கு 2429.05 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் 487.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (9.1.2023) சென்னை கடற்கரை சாலை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.
இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டாபிக்ஸ்