Lunar eclipse: சந்திரகிரகணத்தால் முக்கிய கோயில்கள் நடை அடைப்பு
இன்று சந்திர கிரகணம் என்பதால் திருப்பதி திருமலை வேங்கடேஸ்வரா கோயில், மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்வதை முன்னிட்டு திருப்பதி திருமலை கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
கிரகணம் முடிந்ததும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்குத் திறந்துவிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சந்திர கிரகணம் இன்று மதியம் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 6.19க்கு முடிகிறது. இதைத் தொடர்ந்து திருப்பதி கோயில் நடை காலை 8.40 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கோயில் ஆகம முறைப்படி இன்று மாலை 7.20 மணியளவில் திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்படும்.
கிரகணம் முடியும்வரை அன்னப்பிரசாத கூடமும் திறக்கப்படாது. சுவாமி தரிசனம், ஆர்ஜித பூஜைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய தரிசனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. பௌர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய கோயில்களிலும் தரிசனம் ரத்து-
சந்திர கிரகணத்தை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் திருமுருகன் பூண்டி கோயில்களில் மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படும். பின் கோயில் நடை திறக்கப்பட்டு புண்ணிய ஜன பூஜைகள் நடைபெற்று இரவு 7.15 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.
இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நடை காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படுகிறது. மீண்டும் இரவு 7.31 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ராமேஸ்வரம் கோயிலில் நண்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என்றும் புனித தீர்த்தம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வழக்கம்போல் காலை 6.15 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 10.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 6.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்