Sivakasi: காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி படுகொலை.. மனைவி கண்முன்னே கேட்ட மரண ஓலம் - சகோதரர் உள்பட 3 பேர் கைது!
Sivakasi Murder: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sivakasi Murder: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி(22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து, அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.
சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நந்தினி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 24) இரவு 9 மணி அளவில் நந்தினியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக்பாண்டி வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கார்த்திக் பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வெட்டி படுகொலை
இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்து கடைக்குள் ஓட முயன்ற கார்த்திக் பாண்டியை சூப்பர் மார்க்கெட் வாசலில் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த கார்த்திக் பாண்டி மனைவி நந்தினி கண் முன்பே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை
இது குறித்து தகவலறிந்து வந்த திருத்தங்கல் போலீஸார் கொலை செய்யப்பட்ட கார்த்திக் பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
பின்னணி என்ன?
இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனது சகோதரி நந்தினி காதல் திருமணம் செய்த ஆத்திரத்தால் சகோதரர்கள் பாலமுருகன்(27), தனபாலமுருகன்(25) மற்றும் தனது நண்பர் சிவா(23) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கார்த்திக் பாண்டியை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.
3 பேர் கைது
இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களது நண்பரான சிவா ஆகிய 3 பேரை கைது செய்தனர். தற்போது அந்த மூன்று பேரையும் திருத்தங்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த இளைஞரைப் பெண்ணின் சகோதரர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆணவப்படுகொலை
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விருதுநகர் அருகே கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞரை கள்ளிக்குடியில் வைத்து ஆணவப்படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் தம்பதியின் 21 வயது மகன் அழகேந்திரன். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 24ஆம் தேதி அழகேந்திரன் தனது உறவினரான மதுரை கள்ளிக்குடியில் உள்ள அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மகன் வீடு திரும்பாததால் அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அழகேந்திரனின் பெற்றோர் உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் அழகேந்திரன் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துச் சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்தில் மற்றொரு காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்