KN Nehru: “அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பதே அரசின் நோக்கம்”-அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
அடிப்படையில், கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட, தடை உத்தரவிற்கு உட்படாத விளம்பரப் பலகைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட்டுள்ளன. - அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும், உண்மை நிலவரத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தமட்டில், “Tamil Nadu Urban Local Bodies Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 மற்றும் Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 விதிகளின்படி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒரு வழக்கில் மாண்பமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பிறகு அ.தி.மு.க. ஆட்சியிலேயே, 2018 ஆம் ஆண்டில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களில் விளம்பரங்கள் செய்யும் “ஏகபோக சூழல்” அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது.