Thirukkural: ’வள்ளுவரை தெரியும்! முனுசாமியை தெரியுமா?’ திருக்குறளார் முனுசாமி பிறந்தநாள் இன்று!
”நாடாளுமன்ற விவாதங்களில் திருக்குறளை மேற்கொள்காட்டி பேசும் இன்றைய எம்பிக்களுக்கெல்லாம் முன்னோடி!”
அறநெறி போதனைகளின் உன்னதமான தமிழ் உரையான திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவர் திருக்குறள் வி.முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். கல்லூரி காலத்தில் திருக்குறள் மீது கொண்ட ஈடுபாடு அவரை 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்ய வைத்தது. திருக்குறளை நயமிக்க நகைச்சுவை வடிவில் விளக்க கூடிய திறன் இவருக்கும் பெரும் பெயரை பெற்றுத் தந்தது. திருக்குறளை அட்டைகளில் எழுதி வீதியெங்கும் தமிழ் முழக்கம் பரப்பும் பணியை முழு மனதோடு செய்தார்.
கல்லூரி படிப்பை முடித்த அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1948ஆம் ஆண்டில் சென்னை ராயபுரத்தில் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். இவரின் திருக்குறள் பரப்பும் பணி குறித்து அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் “குறட்பயன் கொள்ள நம் திருக்குறள் முனிசாமி சொ கேள்வது போதுமே” என பாராட்டினார்.
1951ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உடையார் பாளையம் ஜமீனால் இவருக்கு “திருக்குறளார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் 1952 ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நாடாளுமன்ற உரைகளில் திருக்குறளை பதிவு செய்து பேசத் தொடங்கினார். தமிழ்நாடு தவிர்த்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருக்குறளை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டார். பின்னர் சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியில் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.
1981ஆம் ஆண்டில் மதுரையில் எம்ஜிஆர் நடத்திய உலகத்தமிழ் மாநாட்டில் திருக்குறள் குறித்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தினார். தமிழ்நாடு அரசு தொடங்கிய திருக்குறள் நெறிபரப்பும் மையத்தின் இயக்குநராக தொடர்ந்து நான்குமுறை நியமிக்கப்பட்டார்.
திருக்குறளை மையமாக கொண்டு பல்வேறு தலைப்புகளில் 20க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் திருக்குறளார் முனுசாமி எழுதி உள்ளார். ஜனவரி 4, 1994ஆம் ஆண்டு தனது 80ஆம் வயதில் திருக்குறள் முனுசாமி காலமானார். தனது தீவிர திருக்குறள் ஆய்வுகள் மூலம் இன்று வரை அறியப்படும் நபராக உள்ளார்.
டாபிக்ஸ்