'மிக மோசமான நிலையில் இந்திய ஜனநாயகம்.. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கிறார்' - மு.க.ஸ்டாலின்
என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான என்.சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பின்னர் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில்,”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார்.
என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். அது மட்டுமல்லாமல், காலவரையறையின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரிய ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு அம்மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.