Hari Nadar:ஹரிநாடாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்- எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஹரி நாடார்பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 மே மாதம் ஒரு குற்ற வழக்கில் கைது செய்தனர். அவரை பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக இரண்டு தொழிலதிபர்கள் இடம் பண மோசடி செய்த விவகாரத்தில் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன சிறைச்சாலையில் கைது செய்தனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 22 மாதங்களாக விசாரணை சிறைவாசியாக இருந்த அவரை மீண்டும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஹரி நாடார் மீது குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய இரு தொழிலதிபர்களிடமும் ரூ.100 கோடி வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஹரிநாடார் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஹரி நாடார் மோசடி செய்தது உறுதியானதால் , போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் காவல்துறையினர் ஹரிநாடாரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவர் ஹரிநாடார். தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளரும் இவர் தான்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்