பட்டியலின ஊராட்சி தலைவர்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் - இறையன்பு !
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பட்டியலின ஊராட்சி தலைவர்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் - இறையன்பு !

பட்டியலின ஊராட்சி தலைவர்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் - இறையன்பு !

Divya Sekar HT Tamil
Aug 23, 2022 10:14 AM IST

சாதிய பாகுபாடு காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

<p>தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்</p>
<p>தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்</p>

இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் , "ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சாதிய பாகுபாடு காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

*தலைவர் பெயர்ப் பலகை இல்லாத ஊராட்சிகள் – பெயர்ப் பலகை வைப்பதை உறுதி செய்து புகைப்படங்களுடன் அரசுக்கு அனுப்பவும்.

*தலைவர் நாற்காலியில் அமர முடியாதவை – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவரை, தலைவர் நாற்காலியில் அமர வைப்பதை உறுதி செய்யவும்.

*அலுவலகத்தில் அமர முடியாதவை – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் / பிரதிநிதிகள் அலுவலகத்தில் அமர்ந்து, அலுவலகப் பணிகள் செய்வதை உறுதி செய்யவும்.

*அலுவலக சாவி தலைவருக்குக் கிடைக்காத கிராமங்கள் – ஊராட்சி அலுவலகத்தின் சாவியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குக் கிடைக்க ஆவன செய்யவும்.

*ஆவணம் / வரைபடம் ஒப்படைக்கப்படாத ஊராட்சிகள் – ஊராட்சிகளின் ஆவணம், வரைபடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும்.

*துணைத் தலைவர் கையெழுத்துப் போட ஒத்துழைக்க மறுக்கும் ஊராட்சிகள் – உரியவருக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்கவும்.

*தலைவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் / மிரட்டப்படும் ஊராட்சிகள் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தனது பணியினை நிறைவேற்றத் தேவையான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யவும்.

*தலைவர் தீண்டாமை எதிர்கொள்ளும் ஊராட்சிகள் – இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு-17ன் படி குற்றம் என்பதால், சுமுகமான சூழ்நிலையை உருவாக்க உறுதி செய்யவும்.

*பெண் தலைவர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஊராட்சிகள் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிப் பெண் தலைவர்கள் எவ்வித பாகுபாடுகள் இன்றி பணி செய்வதை உறுதி செய்யவும்.

*மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி அவமரியாதை செய்யப்படுவது – ஊராட்சித் தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழிவகை செய்து உறுதி செய்யவும்

எவ்வித சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும்விதமாக, மேலே பட்டியலிடப்பட்ட இடங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதமாகச் செயல்படுத்தவும், மேற்படி பிரச்சினைகளைக் களைவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தேன். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்தான ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.