Senthil Balaji Arrest: ’செந்தில் பாலாஜி கைது திமுகவை மேலும் வலுப்படுத்தும்’ அமைச்சர் டிஆர்பி ராஜா!
”மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவர் மீது எந்த பழி இல்லை என்று நிரூபித்து நிச்சயம் வெளிவருவார்”
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கல் வெளியானது.
அமலாக்கத்துறை சோதனை
நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.
மருத்துவனையில் சிகிச்சை
அமலாகத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள அறையில் அமலாகத்துறை அதிகாரிகள் மூன்றுக்கும் மேற்பட்டோரும் சி.ஆர்.பி.எஃப் போலீசாரும் காத்திருக்கின்றனர்.
பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரை
செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர்.
இன்று காலை சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து வரும் 16ஆம் தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைப்படி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
டி.ஆர்.பி.ராஜா பேட்டி
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஆய்வுக்காக வந்த தொழில் மற்றும் வர்த்தக ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு கோவையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய இங்கு வந்திருந்தேன். வருங்காலத்தில் புதிய திட்டங்களை கொண்டு வருதற்கான வேலைகளை முதலமைச்சர் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாகத்துறை கைது செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதைவிட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக, நிச்சயமாக இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக திமுக வெற்றி நடைபோடும்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவர் மீது எந்த பழி இல்லை என்று நிரூபித்து நிச்சயம் வெளிவருவார். இந்த நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் என டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.