Telangana Election 2023: ’கேசிஆருக்கு அதிர்ச்சி! தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு!’
”119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது”
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கே.சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக உள்ள பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளை இடையே அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் 2014ஆம் ஆண்டில் 21 இடங்களையும், 2018ஆம் ஆண்டில் வெறும் 19 இடங்களையும் காங்கிரஸ் கட்சி பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியாகும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் வாக்குகளை அள்ளும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. அதில், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும். காஸ் சிலிண்டரின் விலை ரூ.500-க்கு விற்கப்படும். அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிதி உதவி ஆண்டுதோறும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி, கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். யுவ விகாஷம் திட்டத்தின் கீழ் மாணவர்கள் தங்களின் கல்லூரி கட்டணத்தைக் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். தெலங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 250 சதுர அடி நிலம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் இணைந்து தேர்தல் பணி ஆற்ற வேண்டுமென திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.