Educational Loan: கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு..மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
Educational Loan: கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் வரை கடன் வசதி
தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று மாநில அரசு சார்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய மற்றும் தனியார் வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வரும் நிலையில், கூட்டுறவு வங்கிகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. புத்தகக் கட்டணம், தங்குமிட கட்டணம், உணவுக் கட்டணம், டியூஷன் கட்டணம் என்பன உள்ளிட்ட பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கல்வி கடன் உயர்வு
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என கருதி, தமிழக முதல்வரின் உத்தரவுபடி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்று பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி எவ்வளவு?
கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்ககீகரிக்கப்பட்ட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலைப் பட்டப் படிப்புக்கும், தொழில்முறை படிப்புகளுக்கும் (professional courses) கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்குகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.
டாம்கோ மூலம் உதவி
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.
எந்தெந்த வங்கிகள் மூலம் கடன் பெறலாம்
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நிறுவனங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கல்விக் கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.