தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Teacher Teaching As Disguised Poets And Kings In Government School At Vembur

புலவர்கள், மன்னர்கள் வேடமணிந்து பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - காரணம் என்ன?

Karthikeyan S HT Tamil
Mar 05, 2023 01:34 PM IST

Vembur Government School Tamil Teacher: புலவர்கள், மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் வேடமணிந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரும் அரசு பள்ளி ஆசிரியரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

புலவர்கள், மன்னர்கள் வேடமணிந்து பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டி.
புலவர்கள், மன்னர்கள் வேடமணிந்து பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டி.

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகேயுள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக துரைப்பாண்டி என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே சுதந்தி போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்கள் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைப்பாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பதும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். 

சிறுவயதில் அவரிடம் இருந்த ஆர்வம், துடிப்பு ஆகியவை தான் ஆசிரியராக பொறுப்பு ஏற்றதும், அதை மாணவ-மாணவிகளின் கற்றலை ஊக்குவிக்கவும், அவர்கள் புரிந்து ஆர்வமுடன் படிப்பதற்கும் பயன்படுத்தி கொண்டார். தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜராஜசோழன் உள்ளிட்டோர் போன்று வேடமணிந்து தினசரி பாடம் எடுத்து அசத்தி வருகிறார்.

2014ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைப்பாண்டி, கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடமணிந்து சென்று மாணவ-மாணவிகள் மத்தியில் பாடங்களை சொல்லி கொடுத்து அவர்களுக்கு பாடம் எளிதில் புரியும்படி பணியாற்றி வருகிறார். வேடமணிவதற்கு என்றே தனது ஊதியத்தில் ஒரு பகுதியை செலவு செய்து வருகிறார். 

தொடக்கத்தில் வேடமணியும் போது கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், துரைப்பாண்டியின் முயற்சிக்கு அப்பள்ளியின் மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உதவி புரிய தொடங்கியுள்ளனர். வேடம் அணிந்தது மட்டுமல்ல, அந்த வேடத்திற்குரிய கம்பீரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவதால் மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளுகின்றனர்.

இது குறித்து துரைப்பாண்டி கூறுகையில்,  "பாடங்களை மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்காமல் மனப்பாடம் செய்து படிக்கும் நிலை இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் காட்சி பொருளாக இருந்தால் அதை எளிதில் புரிந்து கொள்கின்றனர் என்பதால் எனது வகுப்புறையில் மாற்றம் கொண்டு வர வேடமணிந்து பாடத்தினை கற்பிக்கும் முறையை கொண்டு வந்தேன். இதனால் மாணவர்கள் இடையே மனப்பாடம் செய்வது குறைந்து பாடங்களை புரிந்து கொள்ள தொடங்கினர். 

கொரோனாவிற்கு பின்னர் மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையே இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தினால் தினந்தோறும் மாணவர்களின் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதாகவும், தன்னுடைய முயற்சிக்கு தங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆசிரியர் என்ற முகமூடியை நீக்கி விட்டு மாணவர்களுடன் மாணவராக இருந்து, பாடங்களை நடத்துவது மட்டுமின்றி, பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக உருவகப்படுத்தி காட்சியாக மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறனை ஊக்குவித்து வரும் ஆசிரியர் துரைப்பாண்டியின் பணி பாராட்டுக்குரியது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்