தமிழகத்தின் நம்பர் 1.. முதல்வர் யார் இந்த பனகல் அரசர்
பனகல் அரசர் 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையத் துறை சட்டத்தை இயற்றினார். நலிவுற்ற ஆலயங்களுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
சென்னை தி. நகரில் உள்ள பனகல் பூங்கா இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்த பெயர் வந்ததற்கான காரணம் தெரியுமா? பனகல் அரசரின் பெயரில்தான் அந்த பனகல் பூங்கா உருவாக்கப்பட்டு அங்கு அவரது சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
பனங்கண்டி ராமராய நீங்கார் இன்றைய ஆந்திர மாநிலத்தின் காலஹஸ்தி அருகில் 1866 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் பிறந்தார். அங்கிருக்க கூடிய பனகல் என்ற ஜமீனின் ஜமீன்தாரராக இருந்தார். கல்வி...
பனகல் அரசர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் தன் உயர் கல்வியை முடித்தார். பின்னர் சென்னை மாநில கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். 1899ல் சட்டப்டிப்பில் முதுகலை பட்டமும் பெற்றார்.
அரசியல்
பனங்கண்டி ராமராய நீங்கார் என்ற இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதல்வரும் ஆவார். அன்றைய சென்னை மாகாணம் என்பது தமிழகத்தின் முழு பகுதியும் , ஆந்திரமாநிலத்தின் பெரும் பகுதியும், கேரளா, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளும், ஒரிசாவின் கஞ்சம் மாவட்டம் அனைத்தும் சென்னை மாகாணத்தில் இருந்தது. இவர் 1912ல் இந்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன் தாரர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1915 வரை செயல்பட்டார்.
அப்போது நடேச முதலியார் 1914ல் தொடங்கிய சென்னை திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்திலும் சேர்ந்தார்.
இந்த நிலையில் 1917ல் டாக்டர்.எம் ராயும், தியாக ராய செட்டியாரும் இணைந்து தோற்றுவித்த நீதிக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
அந்த சமயத்தில் தான் 1919ல் பிராமணரல்லாதோருக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கோரி பிரிட்டீஸ் நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சி குழுவில் இடம் பெற்றார்.
பின்னர் 1920ல் இரட்டை ஆட்சிமுறையின் கீழ் சென்னையில் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் முதல் முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைந்தது. அதில் உள்ளாட்சி துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் 11 ஏப்ரல் 1921ல் சுப்பராயலு உடல் நலக்குறைவால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அப்போது ராமராயநீங்கார் பிரதமராக பதவி ஏற்றார்.
அரசுப் பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்தார். தலித்துகள் பறையர்கள் என்று குறிப்பிடாமல் ஆதி திராவிடர் என்று குறிப்பிட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்.
இந்நிலையில் 1923 ஆம் ஆண்டு இரண்டாம் சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் வெற்றி பெற்று ராமராய நீங்கார் மீண்டும் முதல்வர் ஆனார். சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி.ஆர்.ரெட்டி தலைமையில் எதிர்க்கட்சிகள் ராமராய லிங்காருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணைகொண்டு அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்தார். அதே ஆண்டு தான் பிரிட்டிஷ் அரசு அவருக்கு பனகல் அரசர் என்ற பட்டத்தை வழங்கியது.
இதையடுத்து தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையத் துறை சட்டத்தை இயற்றினார். நலிவுற்ற ஆலயங்களுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. மருத்துவபடிப்பிற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்த சமயத்தில் மருத்துவ படிப்பிற்கான தகுதியில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி சட்டம் கொண்டு வந்தார்.
1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்ற தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகளின் அரசு அமைந்த போது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறப்பு
பனகல் அரசர் 16 டிசம்பர் 1928 இல் உயிரிழந்தார். அவரது நினைவாக தி நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா பனகல் பூங்கா என்றும் சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் பனகல் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது.
அந்தவகையில் இன்று இந்தியா முழுவதும் பேசுபொருளாக உள்ள இடஒதுக்கீட்டை அன்றைக்கே வகுப்பு வாரி உரிமை என்ற முறையில் தீர்மானமாக சட்டமன்றத்தில் கொண்டு வந்த பனகல் அரசரின் நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9