TN Govt: அமைச்சரவை மாற்றம் எதிரொலி! மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை மாற்றி தமிழக அரசு அதிரடி! உங்கள் ஊருக்கு யார் தெரியுமா?
மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக மாவட்டம் தோறும் ஒரு அமைச்சர்களை தமிழ்நாடு அரசு பொறுப்பாளர்களாக அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டு டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டார்.
மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக மாவட்டம் தோறும் ஒரு அமைச்சர்களை தமிழ்நாடு அரசு பொறுப்பாளர்களாக அறிவித்திருந்தது.
இதன் படி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த நாசரிடம் இருந்து இலாகா பறிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் புதிய பட்டியலை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.
இதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த அர.சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார் என்றும் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் ரகுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களின் பட்டியலின் படி, சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு எ.வ.வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிவ.வீ.மெய்யநாதன், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வி.செந்தில் பாலாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அர.சக்ரபாணி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பொறுப்பு அமைச்சர்களாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.