TamilNadu Assembly: ’கல்வராயன் மலையா? கள்ளச்சாராய மலையா?’ பேரவையில் சுளீர் கேள்வி எழுப்பிய ஈ.ஆர்.ஈஸ்வரன்!
Tamil Nadu Assembly Day 4: கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற சிறப்பு நிதியை ஒதுக்கி, அந்த பகுதி மக்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க அரசு முன்வருமா? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
’கல்வராயன் மலையை கள்ளச்சாராய மலை என்று அழைக்கும் நிலை’ உள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
சட்டப்பேரவை 4ஆம் நாள் கூட்டம்
இன்றைய தினம் உயர்க்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
கள்வராயன் மலையா? கள்ளச்சாராய மலையா?
கேள்வி நேரத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன், ”கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற சிறப்பு நிதியை ஒதுக்கி, அந்த பகுதி மக்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க அரசு முன்வருமா?, இன்றைக்கு கள்வராயன் மலையை கள்ளசாராய மலை என்று எல்லோரும் அழைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலைக்கு அதிக மக்கள் வந்து சென்றால், அது தடுக்கப்படும். சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற அமைச்சர் முன் வருவாரா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன். கள்வராயன் மலை என்பது மிகவும் பிரத்திபெற்ற சுற்றுலாதளம் ஆகும். அந்த இடத்தை மேம்படுத்துவது அவசியம், அரசின் நிதிநிலைக்கு ஏற்ப, முதல்வரின் உத்தரவை பெற்று மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என கூறினார்.
சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக!
முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை இன்று புறக்கணித்து உள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்திலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து இருந்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குற்றம்சாட்டியதுடன், சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்