EPS vs MKS: ’ஓடி ஒளியும் முதலமைச்சர் அல்ல ஸ்டாலின்’ என்றால், கள்ளக்குறிச்சிக்கு செல்லாதது ஏன்? ஈபிஎஸ் சரமாரி கேள்வி!
Tamil Nadu hooch Tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய குடித்து இதுவரை 55 பேர் இறந்து உள்ளதாக செய்திகள் எங்களுக்கு கிடைத்து உள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பச்சை பொய் சொல்கிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
’ஓடி ஒளியும் முதலமைச்சர் அல்ல ஸ்டாலின்’ என்றால், உடனடியாக மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டுமே. ஏன் சொல்லவில்லை, பயமா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால்வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது.
அதிமுக வெளிநடப்பு
இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்’ குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இன்றைய தினம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
பலமுறை நாங்கள் குரல் கொடுத்தோம். இது மக்களின் உயிர் பிரச்னை, தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை எத்தனை பேர் மது அருந்தி உள்ளனர். எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள், இதுவரை எத்தனை பேர் இறந்து உள்ளனர். இப்போது சிகிச்சையில் உள்ளவர்கள் நிலை என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், பேச அனுமதி கேட்டோம். ஆனால் இன்றும் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
இதுவரை 55 பேர் மரணம்
இன்றைய தினம் எங்களுக்கு கிடைத்த தகவல்படி, 183 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் இதுவரை 55 பேர் இறந்து உள்ளதாக செய்திகள் எங்களுக்கு கிடைத்து உள்ளன. நாள்தோறும் இறப்புகள் தொடர்கின்றது. அரசு மெத்தனமாக செயல்படுகின்றது. வேகமாக செயல்பட்டு இருந்தால் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
ஹுமிபெஸோல் என்ற உயர்க்காக்கும் மருந்து அரசு மருத்துவமனையில் இல்லை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்து வருகின்றார்.
அரசின் கையாளாகாதனம்
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக அமைச்சர் சொல்கிறார். காலதாமதமாக வர காரணமே இந்த அரசுதான். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மூன்று பேர் உயிரிழந்த உடன், ”ஒருவர் வயிற்றுப்போக்காலும், இன்னொருவர் வயது மூப்பாலும், மற்றொருவர் வலிப்பு வந்தும் உயிரிந்துவிட்டதாகவும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்” என கூறினார். உண்மையை மாவட்ட அட்சித் தலைவர் சொல்லி இருந்தால், கள்ளச்சாராயம் குடித்தவர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பச்சை பொய்யை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்கிறார். இந்த அரசின் கையாளாகதனம்.
சிபிஐ விசாரணை தேவை
இதில் திமுகவை சேர்ந்த 2 கவுசிலர்களுக்கு தொடர்பு உள்ளதாக மக்கள் என்னிடம் கூறி உள்ளனர். மேலும் திமுக மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்களை விசாரிக்க வேண்டும் என மக்கள் சொல்கின்றனர். இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், சிபிஐ விசாரணை வேண்டும். அரசின் ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளியில் வராது.
முதல்வருக்கு கேள்வி
நாங்கள் பயந்து வெளியேறவில்லை. முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால், அப்போதே முதலமைச்சர் பதில் சொல்லி இருக்க வேண்டும். ’ஓடி ஒளியும் முதலமைச்சர் அல்ல ஸ்டாலின்’ என்றால், உடனடியாக மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டுமே. ஏன் சொல்லவில்லை, பயமா? என எடப்பாடி பழனிசாமி கூறினார்.