Jayakumar: ’ஆஷ் துரையாக ஸ்டாலின் மாறிவிட்டார்’ விளாசும் ஜெயக்குமார்
”மீண்டும் அம்மா ஆட்சி வரும்போதுதான் இது போன்ற சோகமான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்”
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடும் வகையில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது என்றார்.
கேள்வி:- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை அரசு மருத்துவமனையில் நடந்த சிகிச்சையால் உயிரிழந்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஏழையின் கண்ணீர் கூரிய வாளுக்கு சமம் என்பார்கள்; எனவே அந்த கூரியவாள் நிச்சயமாக இந்த அரசை வீழ்த்தும். மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் ஆஷ் துரையாக ஸ்டாலின் உள்ளார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பராமரிக்காமல் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் பணிநியமனம் இல்லை, சுவாசிக்கும் கருவிகள் இல்லாமல் டீ கப்பை சாதனமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகள் மக்கள் மீதான நம்பிக்கையை இந்த அரசு இழந்து வருகிறது.
மீண்டும் அம்மா ஆட்சி வரும்போதுதான் இது போன்ற சோகமான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த யார் மீது தவறு என்பதை விசாரித்து நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும்.
கேள்வி:- காவிரி நதிநீர் பிரச்னையில் பாஜக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளாரே?
கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கூட்டணிக் கட்சி உடன்பேச மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். சட்டப்படி தண்ணீர் விட்டாலேபோதும். இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பெங்களூரு சென்ற ஸ்டாலின் இது குறித்து எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.