BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது பாஜக நிர்வாகியா? யார் இந்த செல்வராஜ்? பதற வைக்கும் கொலை பின்னணி!
BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நாளை அடக்கம்
ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. நாளைய தினம் அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கொலை வழக்கில் பாஜக நிர்வாகி கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 48 வயதான செல்வராஜ் என்பவர் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மண்டலத் தலைவராக இருந்து வருவதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சில தகவல்கள் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அது குறித்து முழுமையாக சொல்ல முடியாது. 2023ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் 63 கொலை நடந்து இருந்தது. ஆனால் இதுவரை 58 கொலைகள் மட்டுமே நடைபெற்று உள்ளது என தெரிவித்தார்.
சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என திருமாவளவன் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, மூன்று மணி நேரத்தில் கிடைத்த தகவல்களை வைத்து குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம். அவர்கள் கூறுவது குறித்து நிச்சயம் விசாரிப்போம். இது அனைத்தும் விசாரணையின் ஒரு பகுதி. கொலை தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றோம் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.