Nanguneri Incident: நாங்குநேரி சம்பவம்! கலங்கிய அன்பில் மகேஷ்! வீடியோவில் சொன்ன அதிரடி அறிவிப்பு!
”உங்களுடைய அண்ணனாக சொல்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். இது போன்ற ஒரு சம்பவங்கள் இனியும் நடக்காத வண்ணம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் பொறுப்பு”
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் உள்ள கூலித் தொழிலாளி முனியாண்டி - அம்பிகாபதி தம்பதிக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும் 14 வயதில் சித்ரா செல்வி என்ற மகளும் உள்ளனர்.
இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த மாணவர்கள் இரவு 10 மணியளவில் சின்னதுரை வீட்டிற்குள் நுழைந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சின்னதுரையை வெட்டியது. மேலும் அதனை தடுக்க முயன்ற தங்கை சந்திரா செல்வியையும் வெட்டினர். இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் மற்றும் இடை நின்ற மாணவர்கள் 2 பேர் உட்பட 6 பேரை நாங்குநேரி போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புமாணவர்களே! இந்த ஆண்டு வைக்கம் போராட்டம் நூறு ஆண்டுகளை கடந்த ஆண்டு. தந்தை பெரியார் எதையெல்லாம் எடுத்துரைத்தார் என்பதை பற்றி சொல்ல வேண்டும் என்று முதல்வர் சொல்லி உள்ளார்.
மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் நமக்கு புத்திமதி சொன்னபோது புத்திக்கு ஏறாமல் இருந்தபோது கொரோனா என்ற கொடிய நோய் தாக்கும் போது நிறைய கற்றுக் கொடுத்தது.
நம்மை பார்த்து மற்றவர்களெல்லாம் பொறாமை படும் அளவுக்கு பெருமையை தேடித்தரும் போது ஒரு நிகழ்வு வருத்தமடைய செய்தது.
உங்கள் புத்தியை கூர்மைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நாங்கள் ஆனால் உங்களை கூர்நோக்கு இல்லங்களுக்கு சேர்க்க ஆசைப்படவில்லை. ஆனால் ஒரு சில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிப்படைய செய்வதுடன் சோர்வடையவும் செய்ய வைத்துவிடுகிறது.
ஒரே ஊர்க்காரங்களா இருக்கீங்க! ஆனால் ஏதோ ஒரு விதத்தில் வேற்றுமை உணர்வு வந்துவிடுகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மாணவருக்கும், மாணவரின் தங்கையையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளேன்.
அந்த இரண்டு தம்பிகளையும் தங்கைகளையும் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்ந்த்து நான் படிக்க வைப்பேன்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு சொல்.
படிப்பில் கவனம் செலுத்துங்கள், படிப்புதான் முக்கியம், உங்களுக்குள் வேற்றுமை உணர்வை உண்டாக்கி கொள்ளாதீர்கள்.
உங்களுடைய அண்ணனாக சொல்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். இது போன்ற ஒரு சம்பவங்கள் இனியும் நடக்காத வண்ணம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் பொறுப்பு