பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களே இதில் கவனம்; கல்வித்துறை அட்வைஸ்!
Tamilnadu:தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்படாதவாறு விடைத்தாள்களை கவனமுடன் மதிப்பீடு செய்ய வேண்டும்
தமிழகம் முழுவதும் 10 , 12ம் வகுப்புகளுக்கான 2022-23 ம் கல்வியாண்டிற்கான இறுதி தேர்வுகளை மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே எழுதி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் பள்ளிகள் சுமார் 2 ஆண்டுகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களிடையே கல்வி மீதான ஆர்வம் குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஏராளமானவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் உள்ளது பேசு பொருளாகி உள்ளது.
இதற்கிடையில் தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்படாதவாறு விடைத்தாள்களை கவனமுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களை, கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள்(ஆசிரியர்கள்), கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.
அது குறித்த முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-
•முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிகளவில் வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.
•மாணவர் விடைத்தாளில் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல் விட்டு, அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால், அதனை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நடக்கிறது. இதன் மூலம் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் பணியினை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரியவருகிறது.
உதவித் தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மீளச் சரிபார்க்கும் போது கவனக்குறைவினால் அதிகபட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புகார் பெறப்பட்டது, தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்வினை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது தக்க நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.
•மதிப்பீட்டு பணியின்போது தேவையில்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அதேபோல் செல்போனை திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
•மதிப்பீடு செய்ததில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்