Rajiv Gandhi Case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு பெரிய போராட்டத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் இன்று காலை 5.30 மணிக்கு காலமானார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாக கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
இதற்கிடையில் இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி இருந்தது.
மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு பின்னணி
கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், முருகன், இந்த சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் உளட்ட 7 பேர் தண்டனை பெற்று சுமார் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விடுதலை செய்யப்பட்ட பிறகும் முகாமில் வைக்கப்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்திருந்த சாந்தன், தன் சொந்தநாடான இலங்கைக்கு செல்ல அனுமதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
30 ஆண்டுகளாக என் தாயை நான் பார்க்கவில்லை, அப்பாவுக்கான கடமையை செய்ய முடியவில்லை என்ற மன உறுத்தலுடன் வாழும் நான், வயதான தாயாருடன் கடைசி காலத்தில் வாழ விரும்புகிறேன் என்றும் சாந்தன் குறிப்பிட்டிருந்தார்.
டாபிக்ஸ்