Rain Alert: ’திருவண்ணாமலை முதல் மதுரை வரை!’ 27 மாவட்டங்களில் 7 மணி வரை மழை நீடிக்கும்!
”Rain Alert: இன்று மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் காலை முதலே அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது”
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரவு 7 மணி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு காற்றின் வேக திசை மாறுபாடு காரணமாக இன்றைய தினம் (26-11-2023) கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, கரூர், விருதுநகர் இடி மின்னல் உடன் கூடிய மழை 7 மணி வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் காலை முதலே அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை அங்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது
டாபிக்ஸ்