Tirunelveli: தொடர் மழை எதிரொலி! 4 மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவிப்பு! விவரம் இதோ!
“இந்த மாவட்டங்களில் நேற்றே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுவிடுமுறை அறிவிப்பு”
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓஇரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 84 செ.மீ, நெல்லை மாநகரில் 62.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ, சேரன்மாதேவியில் 40.7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் நேற்றைய தினமே (டிச.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட நிலையில், இன்றைய தினம் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.