Pongal Gift 2023:பொங்கல் பரிசு..5 ஆயிரம் வழங்குக.. அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Eps Announces protest In Thiruvannamalai : பொங்கல் பரிசு 5 ஆயிரம் வழங்கவும், கரும்பு வழங்காததை கண்டித்தும் அதிமுக சார்பில் ஜனவரி 2ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த உருப்படாத ஆட்சியாளர்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும் பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த திமுக அரசும், 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று இந்த திமுக அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த அரசு செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தைப் பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான்.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதல்வர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகில் 2ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.