PM Modi Visits TN : பிரதமர் மோடி, அமித்ஷா தமிழகம் வருகை -4,500 போலீசார் குவிப்பு
பிரதமர் மோடி தமிழக வருகையை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் இரண்டு மணிக்கு மதுரை வருகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்திகிராமம் செல்கிறார். இதற்காக காந்திகிராமம் பல்கலைக்கழக வளாகத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. மேலும், காந்திகிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் தமிழகம் வருகிறார். 3.30 மணி அளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 11 மணிக்கு சென்னை வருகிறார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
மதுரை விமான நிலையத்திலேயே பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, பாஜக நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பிரதமரை வரவேற்க செல்ல திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை- திண்டுக்கல் நெஞ்சாலையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து தமிழக பாஜக மைய குழு நிர்வாகிகளை சந்திக்கும் அமித் ஷா, மக்களவை தேர்தல் பணிகள், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே அமித் ஷாவை சந்தித்து பேச இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டாபிக்ஸ்