Thamirabarani river:தாமிரபரணி ஆறு பெயரை மாற்ற கோரி வழக்கு - அரசுக்கு உத்தரவு
தாமிரபரணி என்பது வடமொழி சொல். எனவே தாமிரபரணி ஆற்றை பொருநை நதி என்று பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட கோரி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் அரசு முடிவு எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், "பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு.
தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக பொருநை நதி எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே அதற்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.
தாமிரபரணி என்கிற வடமொழிச்சொல்லுக்கு மாற்றாக தூய தமிழ் பெயரான பொருநை நதி என
மாற்றம் செய்யக் கோரி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே தாமிரபரணியின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை முக்கியமானதாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தாமிரபரணி என்பதை பொருநை ஆறு என மாற்றுவது குறித்து அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டாபிக்ஸ்