தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  New Announcements Made By School Education Minister Anbil Mahesh Poiyamozhi In The Tamil Nadu Legislative Assembly

13 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள்! அன்பில் மகேஷ் அறிவித்த 26 புதிய அறிவிப்புகள்!

Kathiravan V HT Tamil
Mar 31, 2023 03:41 PM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்க்கல்வி துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. உயர்தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள்

உயர்தொழில் நுட்பக் கணினிஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் ரூ. 175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும்கணினிஆய்வகங்கள் இருக்கும் நிலை உருவாக்கப்படும்.

2. திறன் வகுப்பறைகள்

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தின்

இரண்டாவது கட்டமாக வரும் கல்வியாண்டில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7500 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

3. மாதிரிப் பள்ளிகள்

ஆர்வமும் திறமையும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்க 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மேலும் 13மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி என உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கென வரும் நிதி ஆண்டில் சுமார் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

4. மாபெரும் வாசிப்பு இயக்கம்

அரசுப் பள்ளிகளில் நூலகச் செயல்பாடுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப்

பெற்றுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

5. விளையாட்டு சிறப்புப் பள்ளிகள்

அரசுப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க

ஏதுவாக விளையாட்டுப் பயிற்சிகளுக்கான வசதிகளை எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் (Sports School of Excellence) சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

6. தமிழ் மொழி கற்போம்

வேலை வாய்ப்பின் காரணமாக தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தங்கு தடையின்றி தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக “தமிழ் மொழி கற்போம்” என்ற திட்டம் தொடங்கப்படும்.

7. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை,இலக்கியம்,விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

8. நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படமுன்னெடுத்துச் செல்லவும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும் நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஓராண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 35,847 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் வாயிலாகப் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கென சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

9. அனைத்துப் பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

6 முதல் 8 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று எனக் குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்.

10. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்பாக

செயல்படுத்திட சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்.

11. புதிய ஆசிரியர்களுக்கானப் பயிற்சி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும்

பணியில் சேருவதற்கு முன்னர் 15 நாள் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிருவாகப் பயிற்சிகள் வழங்கப்படும்.

12. தொழிற்கல்வி ஆய்வகங்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொழிற்கல்விப் பாடப்பிரிவுகள் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வேலை

வாய்ப்புப் பெறத்தக்க வகையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளுக்குத் தேவையான ஆய்வகங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

13. மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பாடப்பிரிவுகள் 

வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு (3rd Group) உருவாக்கப்படும்.

14. அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி 

ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன் விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

15. விழிப்புணர்வுப் பயிற்சிகள்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் (hatred news) மற்றும் தவறான தகவல்களைக் (misinformation) கண்டறிவது குறித்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுகுறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

16.மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள்

வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்றுக் காலத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளனர். அதனை

ஈடுசெய்யும் வகையிலும் அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்திடவும், நேர்மறையான எண்ணங்களை

உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

17. மின்னுருப் புத்தகங்கள்

ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அணுகக்கூடிய மின்னுருப் புத்தகங்கள் (Accessible Digital Textbooks) உருவாக்கப்படும். இதன்வாயிலாகப் பார்வைத்திறன் குறைவான மாணவர்களும் பிற மாணவர்களைப்போல பாடப் புத்தகங்களை எளிதாகப் பயன்படுத்த இயலும்.

18. சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்

சிறைச் சாலைகளில் உள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

19. மாநில எழுத்தறிவு விருது

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

20. ஆங்கிலத்தில் தமிழ் நூல்கள்

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய நூல்கள் அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி

பெயர்க்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் தனி வெளியீடாகவோ கூட்டு வெளியீடாகவோ கொண்டுவரப்படும்.

21. தமிழில் உலக இலக்கியங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பதிப்பகங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் மற்றும்

உலக இலக்கியங்களின் எளிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான நூல் வரிசைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கொண்டுவரப்படும்.

22. பாடநூல் கழகத்தை மறுசீரமைத்தல்

காலத்திற்கேற்ப மாறிவரும் கல்விப் பணிகள், மாணவர்களுக்கான நலத்திட்டப் பணிகள், கற்பித்தல் சவால்கள், வாசிப்புப் பழக்க மேம்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நோக்கங்கள் விரிவுபடுத்தப்பட்டு மறுசீரமைக்கப்படும்.

23. இளைஞர் இலக்கியத் திருவிழா

இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், தற்பொழுது நடத்தப்படும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து, இளைஞர் இலக்கியத் திருவிழா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும். எதிர்கால இலக்கிய ஆளுமைகள் உருவாகும் தளமாக இந்த இலக்கியத் திருவிழா அமையும்.

24. கன்னிமாரா நூலகத்தில் சிறப்புப் பிரிவுகள்

கன்னிமாரா பொது நூலகம் பாரம்பரியமிக்க தேசிய நூலகமாகத் திகழ்கிறது. இந்நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்கள், குழந்தைகள், சொந்த நூல்கள் படிக்கும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்படும்.

25. நூலகர்களுக்குப் பயிற்சிகள்

நவீன தொழில்நுட்பம் சார்ந்த வசதிகள் அனைத்து வாசகர்களையும் சென்றடையும் வகையில், அவற்றைக் கையாளுவது குறித்து நூலகர்களுக்குத் தொடர் பயிற்சிகள் ஆண்டுதோறும் ரூ.76 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

26. நூலகங்களைப் புதுப்பித்தல்

அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேரக் கிளை நூலகங்கள் படிப்படியாக ஆண்டுதோறும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வாசகர்கள் வசதிகேற்ப உரிய தளவாடங்களுடன் புதுப்பிக்கப்படும். முதற்கட்டமாக 20மாவட்ட மைய நூலகங்களும் 30 முழுநேரக் கிளை நூலகங்களும் மறுசீரமைக்கப்படும்.

 

IPL_Entry_Point