Nellai Rain: சென்னையாக மாறும் நெல்லை! 2 மணி நேரத்தில் 13 செ.மீ மழை பொழிவு
”வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன”
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட தொடர் மழை வெள்ளபாதிப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்றே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை பகுதியில், இன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 2 மணி நேரத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாற்றில் 7 செ.மீ மழையும், ராதாபுரத்தில் 6.5 செ.மீ மழையும், சேரன்மகாதேவியில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன.
அடுத்த 2 நாட்களுக்கு தொடர் மழை பெய்யும் என்பதால், தென் மாவட்டங்களில் உள்ள அணைகளில் உள்ள நீரானது திறந்துவிடப்பட்டுள்ளது.