Nagercoil Kasi Case: நாகர்கோவில் காசி ஜாமீன் மனு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இளம் பெண்கள், மாணவிகள் என நூற்றுக்கணக்கான இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி காதலிப்பது போல் நடித்து ஆபாச புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27). இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார். இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதானார்.
இவர் மீது போக்சோ வழக்கு பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. தற்போது சிறையில் உள்ள நிலையில் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் சிபிசிஐடி போலீசார் தரப்பில், சிறையில் உள்ள காசி 120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள், 1900 ஆபாச படங்கள் இவரது லேப்டாப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் சில இளம் பெண்களிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளது என நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சிறுமிகள் சிலர் உள்ளனர். இதில் 17 வயது சிறுமி சாட்சி அளித்துள்ளார். எனவே, வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்தி வைத்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காசி மீது போக்சோ உள்ளிட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் பல பெண்கள் மற்றும் சிறுமிகள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். மேலும் சிலர் சாட்சியங்கள் அளிக்க உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் காசிக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காசியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
டாபிக்ஸ்