Kamal Haasan: நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியா? கமல்ஹாசன் சூசக பதில்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அது குறித்த விரிவான பதில் நாளை வெளியாகும் என தெரிவித்தார்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் கோவையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் அக்கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்ததுடன் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையிலும் ஈடுபட்டார். முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்திய தேசிய ஒற்றுமை யாத்திரை பயணத்திலும் கமல்ஹாசன் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் 2024 தேர்தலில் கூட்டணி முடிவை எப்படி எடுப்பது என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
