MK Stalin: ‘மு.க.ஸ்டாலினா?ஜோசப் ஸ்டாலினா?’ மத்திய அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!
தங்கள் கட்சியும் மத்திய அரசும் சூர்யாவை ஆதரிக்கும் என்றும், பேச்சுரிமையை முடக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்த முயற்சிகளை அவர் முறியடிப்பார் என்றும் மத்திய அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.
தமிழ்நாடு பாஜக நிர்வாகியாக உள்ள எஸ்.ஜே.சூர்யா, மதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் உயிரிழந்தார் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறி மதுரை சைபர் கிரைம் போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் 15 நாட்கள் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த கைது சம்பவம் குறித்து கோவா தலைநகர் பனாஜியில் பேசிய மத்திய அமைச்சர் சந்திரசேகர், தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், மக்களின் சுதந்திரம் மற்றும் அவர்களது உரிமைகளை பொருட்படுத்தாமல் அசல் ஸ்டாலினை போல் செயல்படுவதாக கூறினார்.
”ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸ் 66ஏ பிரிவைப் பயன்படுத்தி பாஜகவினரை சிறையில் அடைத்தார்கள் இப்போது, காங்கிரஸின் கூட்டணி கட்சியில் உள்ள ஸ்டாலின், தனது பெயர் அசல் ஸ்டாலினை போன்றது என்பதை நிரூபிக்க ஆசைப்படுகிறார். முன்னாள் சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் போலவே அவர் நடந்து கொள்ள முயற்சிக்கிறார்” என்றார்.
தங்கள் கட்சியும் மத்திய அரசும் சூர்யாவை ஆதரிக்கும் என்றும், பேச்சுரிமையை முடக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்த முயற்சிகளை அவர் முறியடிப்பார் என்றும் மத்திய அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.