V. O. Chidambaram Pillai : வ.உ.சி 86ஆவது நினைவு நாள் - அமைச்சர்கள் மரியாதை!
விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாரின் 86ஆவது நினைவு நாளான இன்று அவரது திருவுருவபடத்திற்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை : வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.
முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
இவர் 1895ல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.மேலும் இவர் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.
பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. இவர் 1936 நவம்பர் 18-ஆம் நாள் காலமானார்.
இந்நிலையில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் உருவப்படம் வைக்கப்பட்டு அலங்காரிக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவபடத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று வ.உ.சி-யின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
டாபிக்ஸ்