Senthil Balaji Arrest: திமுக நெருப்பாற்றியல் நீந்திய இயக்கம்! செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து கி.வீரமணி அறிக்கை!
"தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்தாலும், அவற்றை சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும், வலிமையும் அதற்கு உண்டு"
பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் &- அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம், நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக என விழைந்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் தோல்வி பயம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வுக்கு மிகக் கடினமானதொரு நிலை என்று பா.ஜ.க. அரசு வட்டாரமும் - அதிகார மய்யங்களும் உணர்ந்திருப்பதால் அதன் தோல்வி பயத்தின்காரணமாகவே, வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆட்சி - அமைச்சர்களைத் தம்மிடம் உள்ள ‘திரிசூல’மான சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை முழு வீச்சில் பயன்படுத்தி, தி.மு.க. போன்ற கட்சிகளை அச்சுறுத்தும் வகையினைக் கையாளத் துவங்கியுள்ளதற்கு எடுத்துக்காட்டுதான் - தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சோதனைகள் ஆகும். அதன் மூலம் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மன உளைச்சல் - உடல் நலப் பாதிப்பு ஆகியவை அப்பட்டமான மனித உரிமைகள் பாதிப்பும் ஆகும்.
முன்பு 2011-2016இல் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அவர்மீது தனி நபர்களால் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் விசாரணை, சோதனைகள் என்று இப்போது நடத்த முன் வந்துள்ளது பா.ஜ.க. அரசு.
தி.மு.க. ஆட்சி மீது அவப்பெயரை உருவாக்கும் முயற்சி
அவரும் தொடக்கத்திலிருந்தே அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகக் கூறி, சொன்னபடி ஒத்துழைப்பையும் கொடுத்து வந்த நிலையில், தலைமைச் செயலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபடுவதை - தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் உத்தியாகவே கருத வேண்டியுள்ளது!
தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்தாலும், அவற்றை சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும், வலிமையும் அதற்கு உண்டு; பல நெருக்கடிகள், அவதூறுகள், வழக்குகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற வரலாறும் அதற்கு உண்டு!
சட்டப் போராட்டங்களானாலும், மக்கள் போராட்டமானாலும் இரண்டிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று சோதனைகளிலிருந்து மீண்ட வரலாறும் வலிமையும் தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு! இப்போதும் உண்டு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை மிகவும் சீர்கேடாகுமளவுக்கு, இப்படி நடப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மனித உரிமைப் பறிப்பும்கூட
நாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடையட்டும்!
மக்களுக்கு எந்த ஆட்சி எப்படிப்பட்டது என்பது தெளிவாகப் புரியும். அவர்கள் பொறுமைக்குப் பதில் கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க வேண்டிய முறையில் கிட்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய விரும்புகிறோம்.
இத்தகைய நெருப்பாற்றில், நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இந்தப் போராட்டத்திலும் புடம் போட்ட தங்கமாக வெளிவரும். ஜனநாயகத்தின் நிரந்தரக் காவலராகத் தன் கடமையைத் தவறாது ஆற்றும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.