தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar : சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Savukku Shankar : சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Divya Sekar HT Tamil
May 23, 2024 12:01 PM IST

Savukku Shankar case : யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ட்ரெண்டிங் செய்திகள்

சவுக்கு சங்கர் கைதின் பின்னணி

யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.

பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு

மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.

ரெட்பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு

முன்னதாக பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசியதில் உடன்பாடு இல்லை என்றும் அதனை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரெட்பிக்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மே மாதம் 15ஆம் தேதி அறிவித்தது.

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல்

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்