Madurai High Court: வருமான வரி முறைகேடு வழக்கு - நல்லாசிரியர் விருது வென்ற ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்
வருமான வரி முறைகேடு தொடர்பாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரன் ஜாமின் கோரிய வழக்கில் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன், கடந்த 5 ஆண்டுகளில் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் பண பரிவர்த்தனை செய்துள்ளார். இதற்கு முறையான வருமான வரி தாக்கல் செய்ய வில்லை. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை சிபிஐ போலீசார் கடந்த பிப்ரவரி மாதத்தில் கைது செய்தனர்
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி, ஆசிரியர் ராமச்சந்திரன் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு நேரம் கையெழுத்திட வேண்டும்.
மேலும் சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது" உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மொத்தம் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
பள்ளி மாணவர்களை போல் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கு வருவது, மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அதை வெளி கொண்டுவருவது, செஸ், அபாகஸ் கற்றுதருவது போன்ற சேவையை பாராட்டி ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ராமச்சந்திரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பள்ளி யூனிபார்ம் அணிந்தே சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றார்.
இதற்கிடையே மதுரை, ராமநாதபுரத்தில் வரி தொடர்பான தகவல்கள் அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்த ராமச்சந்திரன் அண்ணன் பஞ்சாட்சரம் என்பவர் பல்வேறு நபர்களுக்கு வருமான வரிசெலுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாக கடந்த 2021இல் வந்த புகார்களின் அடிப்படையில் வருமானவரித்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.
இதையடுத்து பஞ்சாட்சரம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் பணத்தை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஆசிரியர் ராமச்சந்திரனிடம் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
டாபிக்ஸ்