தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Grants Permission For Rss Rally And Directs Police To Gave Proper Protection

MHC: கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2023 03:10 PM IST

கருத்துரிமை, பேச்சு உரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனு.மதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், "சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் பேரணி நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால் மேல்முறையீட்டு மனு விசாரணக்கு உகந்ததுதான். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரமும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளிக்காத அதே காலகட்டத்தில் பிற அமைப்புகளுக்கு 500 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. எனவே அனுமதி மறுத்த காவல்துறை அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை தரப்பில், " நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அணிவகுப்பு நடத்தப்படாது என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்குதான் அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறையில் நடைபெற இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கல் ஊர்வலத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பிறகும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைக்கு பின்னரும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டது.

அனைத்து மத நம்பிக்கையையும் பாதுகாத்து தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் பரீசிலனை செய்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்" என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில், " சுற்றுச்சுவருடன் கூடிய பகுதிகளில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதிகளின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துரிமை, பேச்சு உரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்

அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் மீண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து காவல்துறை முடிவு எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்