MGNREGA : 100 நாள் வேலை திட்டம் - பணிதளப் பொறுப்பாளர் வேலை என்ன?
100 நாள் வேலை திட்டத்தில் பணிதளப் பொறுப்பாளர் வேலைக்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து காண்போம்.
இந்திய நாட்டின் வறுமையை அகற்றும் வண்ணம் கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்.
இதன்மூலம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலையை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்வதுடன், குறைந்தபட்ச கூலி உத்தரவாதத்தையும் இந்தத் திட்டம் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் இத்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்தரவாதம் கிடைத்தது.
இந்நிலையில் இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் குறிந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி ஒதுக்கும் நிலை உள்ளதாகவும்,வேலை செய்யாத நபர்களின் பெயர்களில் பணம் செலுத்துதல், அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், பணித்தள பொறுப்பாளர்கள் பொறுப்புகள் மற்றும் வேலை என்ன என்பது குறித்து காண்போம்.
*குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும்.
*மாற்றுத் திறனாளிகளுக்கே முதல் முன்னுரிமை.
*அடுத்த முன்னுரிமை பெண்களுக்கு வழங்கப்படும்.
*தகுதியான மாற்றுத்திறனாளியோ, பெண்களோ இல்லையென்றால் மட்டுமே ஆண்கள் நியமிக்கப்பட வேண்டும்.
*பணியிட தொகுப்பிற்கு (cluster) இருமடங்காக பணிதளப் பொறுப்பாளர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். (ஊரில் குக்கிராமங்கள் 4 பணியிடமாக தொகுக்கப்பட்டிருந்தால் 8 பணிதளப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்)
*அவ்வாறு நியமிக்கப்பட்ட பணிதளப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட பணிக்கு அப்பணி முடியும் வரை மட்டுமே பணிதளப் பொறுப்பாளராக இருக்க முடியும். (பண்ணைகுட்டை அமைப்பதற்கு ஒருவர் பணிதளப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் அப்பண்ணைகுட்டை வேலை முடியும் வரை மட்டுமே அவர் பொறுப்பில் இருக்க முடியும். அடுத்த வேலைக்கு வேறு ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும்)
*ஊராட்சியின் குறிப்பிட்ட ஊரில் (habitation) நடக்கும் பணிக்கு நியமிக்கப்படும் நபர் பணி நடக்கும் அந்த ஊரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
*பணிதளப் பொறுப்பாளர்கள் பட்டியல் ஊராட்சி உதவியாளர் மற்றும் உதவி BDO அவர்களால் தயாரிக்கப்பட்டு BDO அவர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
*இப்பட்டியல் கிராம சபையிலோ அல்லது சிறப்பு கிராம சபையிலோ வைத்து ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.
*அவ்வாறு ஒப்புதல் பெறப்படும் கிராம சபையில் குறைந்தபட்சம் 50 சதவீதம் 100 நாள் பணியாளர்களாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்.
*பணிதளப் பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் முழு ஊதியமான ரூபாய் 281 முழுமையாக வழங்கப்பட வேண்டும்.