Mansoor Ali Khan: ’போலீஸ் விசாரணைக்கு ஆஜராக முடியாது!’ மன்சூர் அலிகான் அவசர கடிதம்!
”இதனிடையே முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்”
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய புகாரில் காவல்துறை முன் ஆஜராக நடிகர் மன்சூர் அலிகான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையமும் கோரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், "நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். "என்று பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்று காலை நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பினர்.
இதனிடையே காவல்துறை சம்மனுக்கு நேரில் ஆஜராக முடியவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கடந்த 15 நாட்களாக இருமல் இருந்ததாகவும், நேற்றைய தினம் அந்த பாதிப்பு அதிகரித்துவிட்டதால் உடல் நிலை சரி இல்லாததால் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு வேண்டும் என சென்னை ஆயிரம் வைளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.