Hindi Imposition In Tamiladu: இந்தியைத் திணிக்க தொடர் முயற்சி! - மநீம கண்டனம்
கட்டுக்கடங்காமல் போயிருக்கும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை மறக்கச் செய்ய, மொழியைப் பயன்படுத்துகிறது பாஜக அரசு என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை : இந்தியைத் திணிக்க நடக்கும் தொடர் முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது என்று மநீம கூறியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசு வெவ்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருவது கண்டனத்திற்குரியது. அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல், பிரச்சினைகளைத் திசைதிருப்ப மொழியை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடச் செய்வது ஏற்கத்தக்கதல்ல.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் செயல்படும் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 11-வது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே கட்டாயம் பயற்று மொழியாக்கப்பட வேண்டும் என அப்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆங்கில மொழி பயன்படுத்தும் இடங்களிலும் அதைப் படிப்படியாக ஒழித்துவிட்டு, இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும். பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளை, ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியில் தயாரிக்க வேண்டும். அரசுப் பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்தியைப் பயன்படுத்தாத அரசு அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம்கூட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுபோல, இந்தியைத் திணிக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அக்குழு சமர்ப்பித்துள்ளது. இது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தித் திணிப்பை எதிர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் மொழிப் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் தொடர் இந்தித் திணிப்பால், நாடு முழுவதுமுள்ள ஹிந்தி பேசாத மாநிலங்களில் போராட்ட சூழல் உருவாகியுள்ளது.
பல்வேறு இனம், மதம், மொழி, பண்பாடு என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடிவேரான வேற்றுமையில் ஒற்றுமையை அழித்து, ஒரே நாடு, மொழி, மதம், உணவு, கலாச்சாரத்தை நிறுவ மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது, தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைத்துவிடும்.மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது.
தனித்தன்மை கொண்ட ஒவ்வொரு மொழியையும் பாதுகாப்பதை விடுத்து, இந்தியை மட்டும் திணிக்க முற்படுவது தேச ஒற்றுமைக்கு எதிரானது. மக்களைப் பிரித்துப் பார்க்கும் இந்த முயற்சியை எந்த மாநிலமும் ஏற்காது.
கட்டுக்கடங்காமல் போயிருக்கும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை மறக்கச் செய்ய, மொழியைப் பயன்படுத்துகிறது பாஜக அரசு. மக்களைப் பிரிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, கொஞ்சம் பொதுநலனிலும் அக்கறை காட்டுங்கள் மத்திய அமைச்சர்களே!" என்று தெரிவித்துள்ளது.