Lok Sabha Election 2024: பிராமணர்கள் ஓட்டு! தென் சென்னையில் சீட் வாங்க பாஜகவில் போட்டா போட்டி! லிஸ்டில் தமிழிசை வேற!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Lok Sabha Election 2024: பிராமணர்கள் ஓட்டு! தென் சென்னையில் சீட் வாங்க பாஜகவில் போட்டா போட்டி! லிஸ்டில் தமிழிசை வேற!

Lok Sabha Election 2024: பிராமணர்கள் ஓட்டு! தென் சென்னையில் சீட் வாங்க பாஜகவில் போட்டா போட்டி! லிஸ்டில் தமிழிசை வேற!

Kathiravan V HT Tamil
Jan 14, 2024 11:29 AM IST

”20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ் அரசியலில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் இதுவரை போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது இல்லை”

கரு.நாகராஜன் - தமிழிசை சவுந்தராஜன் - எஸ்.ஜி.சூர்யா
கரு.நாகராஜன் - தமிழிசை சவுந்தராஜன் - எஸ்.ஜி.சூர்யா

தொகுதிப்பங்கீடு

திமுக கூட்டணி இது வரை எந்த சலசலப்புமின்றி வலுவாக உள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கு பிறகு தொகுதி பங்கீட்டை திமுக தொடங்க உள்ளது. 

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவை பெறுத்தவரை புரட்சி பாரதம் கட்சி மட்டுமே இதுவரை கூட்டணியில் உள்ளது. ஆனால் முந்தைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்.டி.பி.ஐ கட்சி உடன் கூட்டணி உறவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் பாஜக உடன் பிணக்கில் இருக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை அதிமுக பக்கம் வரவழைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

பாஜகவை பொறுத்தவரை சிறிய கட்சிகளாக உள்ள பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதியநீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகிறது. 

தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த தமது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை. 

25 தொகுதிகள் டார்கெட்

தமிழ்நாட்டை பொறுத்தவரை 25 தொகுதிகளை குறிவைத்து பாஜக வேலை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 25 தொகுதிகளை வெல்ல இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என கூறினார். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மக்களவைத் தொகுதிகளை உன்னிப்பாக கவனித்து தேர்தல் பணிகளை பாஜக ஆற்றி வருகிறது. 

கவனம் பெறும் தென் சென்னை தொகுதி!

இந்த நிலையில் தென் சென்னை தொகுதியை பிடிப்பதில் தமிழக பாஜகவில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. 

கடந்த தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன் ஜெ.ஜெயவர்தனும் போட்டியிட்ட நிலையில், 5,64,872 வாக்குகள் பெற்று தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட்ட ஜெ.ஜெயவர்த்தனால் வெறும் 3,02,649 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

பிராமணர்கள் ஓட்டு

இந்த நிலையில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகள் தென் சென்னைக்குள் வருவதால் கணிசமான வாக்குகளை எளிதில் பெற முடியும் என நம்பிக்கை உடன் தென் சென்னை தொகுதியில் போட்டியிட பாஜகவின் பல முக்கிய புள்ளிக்கள் போட்டிப்போடு வருவதாக கூறப்படுகிறது. 

கரு.நாகராஜன்

குறிப்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவராக உள்ள கரு.நாகராஜன் இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கரு.நாகராஜன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டார். அப்போது நோட்டாவுக்கு கீழ் பாஜகவுக்கு வாக்குகள் கிடைத்ததால் கடும் விமர்சனங்களுக்கு கட்சி உள்ளானது. ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கட்சி பணியாற்றிய நிலையில் தற்போது மாநில துணை தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார்.  

எஸ்.ஜி.சூர்யா

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவரும், பாஜக மாநில செயலாளராகவும் உள்ள எஸ்.ஜி.சூர்யாவும் தென் சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பராகவும் இவர் உள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக கலந்து கொள்ளும் என அறிவிப்பை அடுத்து கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் தொடர்ந்து விவாதங்களில் பேசி கவனம் ஈர்த்து வருகிறார். 

தமிழிசை சவுந்தராஜன் 

இதே போல் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசை சௌதராஜனும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ் அரசியலில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் இதுவரை  போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது இல்லை. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியை  குறி வைத்த நிலையில் அது கூட்டணியில் இருந்த அதிமுகவின் ஜெயவர்தனுக்கு சென்றதால் வேறு வழியின்றிதூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அவரது தோல்விக்கு காரணங்களாக சொல்லப்பட்டது. 

இந்த நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதி அவருக்கு சாதகமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2011ஆம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு தனது இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிலும் போட்டியிட்ட அனுபவம் தமிழிசைக்கு உள்ளது. 

அதுமட்டுமின்றி மயிலாப்பூர், தி.நகரில் உள்ள பிராமணர்களில் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் பட்சத்தில் வெற்றி இலக்கை அடைந்துவிடலாம் என்பது தமிழிசையின் திட்டமாக உள்ளது. 

மத்திய அமைச்சர் பதவி 

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக சார்பில் ஜெயிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் பதவி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள தொகுதிகளை குறிவைத்து பணிகளை தொடங்கி உள்ளனர் பாஜகவின் முக்கிய புள்ளிகள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.