2 Years Of DMK Govt: தடுமாற்றமா? தடமாற்றமா? திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் எப்படி?
DMK Government: திமுகவின் அடுத்தடுத்த சில நடவடிக்கைகள் மக்களை அதிருப்தி கொள்ளச் செய்துள்ளது. கண்மூடித்தனமாக சில அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் பின்வாங்குவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.
கொரோனா உச்சகட்டத்தில் இருந்த போது தமிழக மக்கள் வாழ்வாதாரமும் எதிர்காலமும் என்னவாகும் என்ற கலக்கத்தில் இருந்தபோது தமிழகத்தில் 2021 மே 7ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. அந்த பெருந்தொற்று நாட்களில் திமுகவின் செயல்பாடுகளை பரவலாக பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். ஆனால் சமீபகாலங்களில் திமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மக்களை அதிருப்தி கொள்ளச் செய்துள்ளது. கண்மூடித்தனமாக சில அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் பின்வாங்குவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.
தமிழில் அர்ச்சனை
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான அறிவிப்புப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் வெளியிட்டார்.
இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு 2022 மே மாதம் "அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற திட்டத்தை செயல்படுவது கடினம். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தமிழ் மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. பக்தர்கள் விரும்பினால் தமிழில் தரிசனம் செய்யலாம். இதுவரை இத்திட்டத்தை 47 கோயில்களில் அமல்படுத்தி இருக்கிறோம்" என்றார்.
அதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் பிரச்னையில் உரிய அழுத்தம் தரப்பட வில்லை என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்து உள்ளனர்.
சேலம் 8 வழிச்சாலை திட்டம்
சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பின் போது சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் பேசும் போது சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்யத்தான் சொன்னார். திமுக இந்த திட்டத்திற்கு எதிரி அல்ல. நிலங்களை எடுத்து தான் ஆக வேண்டும். 8வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு என்று பேசினார். இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம்
திமுக, தமது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே வரவேற்பையும் பெற்றது. திமுக ஆட்சி அமைந்தது முதல் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அதேநேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்று தலைமை செயலக வட்டாரங்கள் மறுத்து விட்டன.
பல்லக்கு விவகாரம்
தருமபுரம் ஆதீனத்தில் கடந்த 2022 மே மாதம் 22ம் தேதி நடைபெற இருந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனகர்த்தரை அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தமிழக அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடும் எதிர்ப்பு எழுத்ததையடுத்து தடையை விலக்கிக் கொள்வதாக கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்தார். பின்னர் பட்டின பிரவேசம் நிகழ்வு வழக்கம் போல் நடைபெற்றது.
பேருந்து தனியார் மயம்
சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், கடும் எதிர்ப்பை தொடர்ந்து அரசு பின்வாங்கியது. விரைவு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் நியமனம் எனும் முடிவும் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
டாஸ்மாக்
திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் அதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதே சமயம் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சக செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டார். எனினும் திருமண மண்டபங்களில் இனி மது அருந்த அரசு அனுமதியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்மொழியாக விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
மின் கட்டண உயர்வும்-ஆதார் இணைப்பு
திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியதோடு மின்சார கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது மக்களிடையே கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு ‘ஷாக்’காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது இது நடுத்தர மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமானநிலைய விவகாரத்தில் ஈர நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து போராட்டி வரும் நிலையில் தமிழக அரசு அதை கண்டு கொள்ளாமல் இருப்பது மக்கடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூயஸ்
கோவையில் பிரான்சின் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் வழங்க திமுக எதிர்கட்சியாக இருந்த போதும் கடும் எதிப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஆட்சியில் இருந்தும் அந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கோவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நீட்
திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்துக்கே முதல் கையெழுத்து என்று பேசிய நிலையில் திமுகஅரசு 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்
12 மணி நேர வேலை
இவை எல்லாவற்றிலும் சிகரம் வைத்தது போல் கடந்த ஏப்ரல் 21ம் தேதி 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் திமுக அறிமுகம் செய்தது. இதை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாது கூட்டணி கட்சிகளே கடும் அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். இது திமுகவின் மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்பட்டது, அதன் பின் அது வாபஸ் பெறப்பட்டது.
இதுபோன்ற அவசர அடி அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் பின்வாங்குவதையும் இனி வரும்காலங்களில் திமுக அரசு எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதே உண்மை.
டாபிக்ஸ்