NEET exam issue: நீட் தேர்வு விவகாரம்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி! என்ன தெரியுமா?
NEET exam issue: மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது என ராகுல் கடிதம்
மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு
அதில், ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, ஜூன் 4, 2024 அன்று நீட்-இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.
மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். தங்களின் கடிதத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நீட் தேர்வு குறித்து ராகுல் ட்வீட்
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் எழுந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் ஆம் தேதி ட்வீட் செய்து இருந்தார். அதில் நீட் தேர்வில் உங்கள் குரலாக மாறுவேன் என ராகுல் காந்தி கூறி உள்ளார். ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நீட் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ட்வீட் செய்து இருந்த அவர், ”நரேந்திர மோடி இன்னும் பதவியேற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த ஊழல் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் பேரழிவுக்கு உட்படுத்தி உள்ளது.
ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆனால் வினாத்தாள் கசிவு தொடர்பான வாய்ப்புகளை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
கல்வி மாஃபியா மற்றும் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்தக் வினாத்தாள் கசிவு தொழிலை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. எங்கள் தேர்தல் அறிக்கையில், சட்டம் இயற்றுவதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவு பிரச்னையில் இருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.
இன்று, நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும் உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என ராகுல் காந்தி கூறி இருந்தார்.
டாபிக்ஸ்