K Veeramani: ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய குடியரசுத் தலைவர் முன்வர வேண்டும் - கி.வீரமணி ஆவேசம்
ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய குடியரசுத் தலைவர் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய குடியரசுத் தலைவர் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (29.6.2023) ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனையின்றி, ‘ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு’ என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில்பாலாஜியை ‘‘டிஸ்மிஸ்’’ செய்வதாக வெளியிட்டார். அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது அவர் எப்படி தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவண சாட்சியம் ஆகும்.
இப்படி அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, திமுக ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய முன்வரவேண்டும் குடியரசுத் தலைவர். அவரை ஆளுநராக அனுப்பியவர்களும், இதற்கான தார்மீகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும்!
13 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நாளும் ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு போட்டி அரசு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும், மக்களும் திரண்டு, ‘‘ஆளுநரை டிஸ்மிஸ் செய்’’ என்ற ஒற்றைக் கோரிக்கையை - பிரச்சாரத்தை எங்கெங்கும் அடைமழையாகப் பொழிய வைக்கவேண்டியது, ஜனநாயகக் காப்புக் கடமையாகும்" என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்