Rahul Gandhi Padayatra:இந்தியாவை பிளவுபடுத்துகிற முயற்சியில் பாஜக -கே.எஸ்.அழகிரி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rahul Gandhi Padayatra:இந்தியாவை பிளவுபடுத்துகிற முயற்சியில் பாஜக -கே.எஸ்.அழகிரி

Rahul Gandhi Padayatra:இந்தியாவை பிளவுபடுத்துகிற முயற்சியில் பாஜக -கே.எஸ்.அழகிரி

Divya Sekar HT Tamil
Sep 06, 2022 09:29 AM IST

ராகுல்காந்தி பாதயாத்திரை திருப்பத்தை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

<p>கே.எஸ்.அழகிரி</p>
<p>கே.எஸ்.அழகிரி</p>

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தி 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

இத்தகைய பயணம் ஏன் தேவைப்படுகிறது?, எதற்காக நடத்தப்படுகிறது? என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இந்த பயணத்தை மேற்கொள்ளும்போது கிராமங்கள், சிறு நகரங்கள், பெருநகரங்கள் வழியே நடந்து சென்று மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை புரிந்துகொண்டு, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற முயற்சியில் தான் ராகுல்காந்தி பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் இந்தியாவை கண்டுணருகிற முயற்சியே இந்திய ஒற்றுமை பயணம். சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். ஓர் இந்தியன் தன்னுடைய சக இந்தியனுடன் சண்டையிட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே புதுப்புது சதித்திட்டங்கள் தினந்தோறும் உருவாக்கப்படுகின்றன. பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளது. பிளவுபடுத்தப்பட்ட சமூகத்தால் வலிமையுடன் இருக்க முடியுமா?, அரசியல் ரீதியாக மக்களின் குரல் இன்றைக்கு ஒடுக்கப்படுகிறது.

நமது அரசியல் சாசன உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்தியாவை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின்படி பிளவுபடுத்துகிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. 

இதன்மூலம் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இணைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ராகுல்காந்தி மேற்கொள்கிற இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, அரசமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்று அறைகூவல் விடுத்து அழைக்கிறோம். இந்திய ஒற்றுமை பயணத்தில் அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வல்லுனர்கள் இவர்களோடு நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்திய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரியில் இருந்து 7ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காமராஜ் மண்டபத்திற்கு சென்ற பிறகு காந்தி மண்டபத்தில் ராகுல்காந்தியிடம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து 600 மீட்டர் பயணத்தை மேற்கொண்டு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று வரலாற்று புகழ்மிக்க உரையை நிகழ்த்துகிறார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அணி அணியாக வாருங்கள், அலை அலையாக வாருங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கிறோம்.”எனத் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.